vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Monday, February 7, 2011

பிற்காலக் கீர்த்தனையாளர்

4.4 பிற்காலக் கீர்த்தனையாளர்
 
    
தமிழக இசைக்கலையின் வரலாற்றில் கி.பி. 19ஆம் நூற்றாண்டு அதன் "பொற்காலம்" எனக் கொள்ளப்படுகிறது. பழங்காலம் முதல் படிப்படியாக வளம் பெற்ற இசைக்கலை கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் பல இசைக்கலை மேதையரின் பங்களிப்பால் உயர்நிலை அடைந்தது.
    
19 ஆம் நூற்றாண்டில் இத்தகையதொரு நிலை தமிழகத்தில் உருவாகியது. இக்காலகட்டம்தான் "கருநாடக இசையின் பொற்காலம்" என மேன்மை பெற்றது. சங்கீத மும்மூர்த்திகள் என இசை உலகோர் பாராட்டும் சியாமாசாஸ்திரி, தியாகைய்யர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய மூவரும் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் வாழ்ந்தனர். தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் அருமையான கீர்த்தனைகளைப் பாடினர். இதே காலத்தில் வாழ்ந்த பலரும் தமிழில் கீர்த்தனைகளைப் பாடினர்.
    
கி.பி. 17-18ஆம் நூற்றாண்டுகளில் முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய மூவரும் வாழ்ந்தனர். தமிழில் கீர்த்தனைகள் பாடிய இம் மூவரும் ஆதி மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுவர்.
    
இவர்களில் அருணாசலக் கவிராயர் மற்றும் மாரிமுத்தாபிள்ளை காலத்தில் வாழ்ந்தவர் ஊத்துக்காடு வெங்கடசுப்பய்யர். ஆதி மும்மூர்த்திகளைப் போல் இவர் தமிழில் மட்டும் கீர்த்தனைகள் பாடவில்லை. இவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், கவிகுஞ்சர பாரதியார், மழவை சிதம்பர பாரதியார், இராமலிங்க அடிகளார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, நீலகண்ட சிவன் ஆகியோர் புகழ் வாய்ந்த கீர்த்தனையாளர்களாவர். இவர்களது இசைப்பணியின் சிறப்பால் இசை மேன்மையுற்றது. தமிழக இசை வரலாற்றில் இவர்கள் வாழ்ந்த கி.பி. 19ஆம் நூற்றாண்டு "கருநாடக இசையின் பொற்காலம்" என மதிக்கப்பட்டது.



    மகாகவி சுப்பிரமணிய பாரதி, இலட்சுமணபிள்ளை, கோடீசுவர ஐயர், கீழ்வேளூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முத்தையா பாகவதர், டைகர் வரதாச்சாரியார், பொன்னையாபிள்ளை, பாபநாசம் சிவன், சுத்தானந்த பாரதியார், பெரியசாமிதூரன் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டுக் கீர்த்தனையாளரில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க ஒரு சிலராவர்.


    இதுவரை குறிப்பிட்டுச் சொன்ன கீர்த்தனையாளர் ஒவ்வொருவரும் தத்தம் தனித்திறமைகளால் தமிழக இசையின் மேன்மைக்குப் பெரும்பங்களித்தனர். இவர்கள் எல்லோரையும் இப்பாடத்தில் அறிமுகப்படுத்த இயலாது. எனவே ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் மற்றும் ஒருசில பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கீர்த்தனையாளர்கள் பற்றி இனிவரும் பகுதியில் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோமா?

No comments:

Post a Comment