vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Monday, February 7, 2011

கே.பி. எஸ். ஹமீது அவர்களின் ‘இலக்கியப் பேழை

தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம், கலைக்கடல், மகாமதி, சதாவதானி கா.ப. செய்குத்தமிழ்ப் பாவலரின் மகனார் கே.பி. எஸ். ஹமீது அவர்களின் ‘இலக்கியப் பேழை’யிலிருந்து.. (முதற்பதிப்பு : 1966)

‘இஸ்லாத்திற்கும் சங்கீதத்திற்கும் சம்பந்தமில்லை. அம்மதத்தினருக்கு , இகலோக சுகபோகங்களுக்குக் காரணமாயிருக்கும் சங்கீதமும் மற்றும் இன்பலாகிரியில் மக்களை ஆழ்த்தும் கேளிக்கைச் சரக்குகளும், விளையாட்டுகளும் பிடிக்கா. இஸ்லாம் மதத்தைப் பொறுத்தமட்டிலுமல்ல, வேறு சில மதத்தினருக்கும் இந்த விஷயத்தில் உடன்பாடு உண்டு’ என்ற பொதுவாரியான மேலெழுந்த கருத்தினால் முஸ்லிம்களுக்கும் இசைக்கும் சம்பந்தமில்லை என்னும் நம்பிக்கை வளர்ந்து வந்திருக்கலாம்; உறுதிப்பட்டும் இருக்கலாம். ஆனால் வட இந்தியாவிலோ முஸ்லிம்களுக்கும் சங்கீதத்திற்கும் இருந்துவரும் மிகநெருங்கிய உறவைச் சொல்ல வேண்டியதில்லை. தென்னிந்தியாவில் கர்நாடக சங்கீதத்திற்கும் ஒரு சில குறிப்பிட்ட  சமூகத்தினருக்கும் இருக்கும் உறவை விட மிக நெருங்கிய உறவு, வட இந்தியாவில் சங்கீதத்திற்கும் முஸ்லிம் ‘உஸ்தாத்’களுக்கும் இடையே உள்ள உறவு.
இஸ்லாம் பிறந்த அரேபியாவில் சங்கீதமில்லையா? அரபி, உசேனி ராகங்களின் பூர்வ வரலாற்றை அறிந்தவர்களே இந்தக் கேள்விக்கு விடைபகரவேண்டுமென்றில்லை. எகிப்தில், பாரசீகத்தில், ஏன் மலபாரில் கூட முஸ்லிம்களிடை சங்கீதம் இருந்தே வருகிறது. உள்ளக் கிளர்ச்சிகளைக் கீழ்த்தரமான முறையில் கிளறி விடத்தக்க இசையைத்தான் இஸ்லாம் வெறுத்தும், இயன்றால் தடுத்தும் வந்திருக்கிறது. இறைவன்பால், சத்தியத்தின் பால், நேர்மையின் பக்கம் மக்களை இழுத்து அவர்களை தெய்வத்தன்மை பெறப் பக்குவப்படுத்தும் சங்கீதத்தை இஸ்லாம் எக்காலத்திலும் எதிர்த்ததாகத் தெரியவே இல்லை. கேரளத்தில் மாப்பிள்ளைப் பாட்டுகளும், தமிழ் முஸ்லிம்களின் ‘மௌலூது’களும் ‘பைத்’துகளும் மற்றும் பதங்களும், காஸிம் புலவர் பாடிய திருப்புகழும், தக்கலை பீர்முஹம்மது சாகிபு அவர்களின் பாடல் திரட்டுகளும், கோட்டாறு ஞானியார் சாகிபவர்களின் மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டும், குணங்குடியாரின் கீர்த்தங்களும் பிறவும் பக்திப் பரவச நிலைக்கு மனிதனின் இதயத்தைப் பதப்படுத்தும் இசையின் வகையைச் சார்ந்தவை அல்லவா?
கர்நாடக சங்கீதத்திற்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் உண்டா? தமிழ்நாட்டில் இஸ்லாம் காலை வைக்கத் தொடங்கிய நாள் தொட்டுள்ள சரித்திர வரலாற்று விபரம் நன்கு தெரிந்தவர்களும் தமிழ் முஸ்லிம்களுக்கும் தமிழிசைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றியறிந்தவர்களும் இந்தக் கேள்வியைக் கேட்கத் துணியமாட்டார்கள். சங்க நூற்களில் இசையும் நாடகமும் தோன்றி அழிந்துபட்ட பல நூறு ஆண்டுகளுக்கும் பின்னர் தமிழில் சிந்தும் , கும்மியும், கண்ணியும், ஆனந்தக் களிப்பும், பண்ணும், பதமும் வண்ணங்களும் அவற்றோடு பள்ளும், குறவஞ்சியும் ஏனைய நாடக நாட்டிய இசைவகைகளும் தோன்ற ஆரம்பித்தன. கி.பி. பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளிலே மக்கள் இலக்கியமாகவும் மக்கள் இசையாகவும் , தமிழ்நாட்டுக்கே உரித்தான பூர்வ சங்கீத வடிவங்களும் சாயல்களும் நாடக ரூபங்களும் பாணிகளும் உருவம் பெறத்தொடங்கின. நாளடைவில் பாமர மக்களின் இசை , கலைவடிவங்களாகத் திகழ்ந்த இவற்றைப் பெரும் புலவர்களும் கூச்சமும் தயக்கமும் இன்றிக் கையாண்டு தத்தம் இலக்கிய சிருஷ்டிகளைச் சமைத்தனர். குற்றாலக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, சரபேந்ர பூபாலக் குறவஞ்சிகளும், முக்கூடற்பள்ளு போன்ற எத்தனையோ பள்ளு நூற்களும் இராம நாடகக் கீர்த்தனை, திருவிளையாடற் புராணக் கீர்த்தனை, நந்தன் சரித்திரக் கீர்த்தனை, பாரதக் கீர்த்தனை, சகுந்தலைக் கீர்த்தனை, ஸ்கந்த புராணக் கீர்த்தனைகளும் மற்றும் தமிழ்நாட்டு சங்கீத மேதைகள் பலர் இயற்றிய பற்பல கீர்த்தனைகளும் தோன்றின. கி.பி 16ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே அதாவது 800 வருடங்களுக்கு முன்னரே (இன்றைய தமிழ்நாட்டில் தமிழிசை இயக்கம் தோன்றுவதற்கு மிக முன்பே) தமிழ் முஸ்லிம்கள் தமிழில் கீர்த்தனை பாடியிருக்கிறார்கள். இடைக்காலத்தில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் இசைப் பயிற்சிப் பாடல்களாக நேயர்களுக்கு வழங்கப்பட்ட சில ஞானியார் சாகிபு கீர்த்தனைகளே இதற்குச் சான்றாகும். சங்கராபரண இராகத்தில் ‘வரவரவேணும் உமதுபதம் தரவரவேணும்’ என்ற கீர்த்தனையும், ‘ஏழைக் கிரங்கியருள் தானே உந்தன் வேளை முகம்பாரும் ஈமானே’ என்ற பைரவி ராக கீர்த்தனையும், ‘என்றைக்குக் காண்பேனோ’ என்ற முகாரி ராகக் கீர்த்தனையும் இன்னும் பலவும் இப்படி பிரபலமடைந்தன. கோட்டாறு மெய்ஞ்ஞான சொரூபி ஹஜ்ரத் ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ் அவர்கள் என்னும்போதே மேற்சொன்ன கீர்த்தனைகள், ஞானியார் என்றறியப்பட்ட சாகிபவர்கள் இசைத்தவை என்பது முஸ்லிமல்லாத பிறதமிழர்களுக்குத் தெரியவரும். ஞானியார் அவர்களின் பக்திப் பரவச ஞானப் பாடல்களின் ஒருபகுதியில் ‘ஞான கீதாமிர்தம்’ என்ற தலைப்பின் அடியில் வருபவை அனைத்தும் இந்தக் கீர்த்தனைகளே. கொட்டாம்பட்டி எம். கருப்பையா பாவலர் அவர்கள் கையில் ஞானியார் அவர்களின் ஏட்டுப் பிரதிகள் கிடைத்ததன் பயனாய்த் தமிழுக்குக் கிடைத்த கீர்த்தனங்கள் இவை.

முந்நூறு வருடங்களுக்கு முன்னரே தமிழில் முஸ்லிம்கள் கீர்த்தனங்கள் எழுதியிருந்தும் முஸ்லிம் தமிழர்களுக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் சம்பந்தம் உண்டா என்ற சந்தேகம் இன்றைக்கும் இருப்பது ஆச்சரியமல்லவா? இந்த சந்தேகத்திற்கும் ஆச்சரியத்திற்கும் கொஞ்சமுமே இடமில்லாமல் செய்து விட்ட பெருமை முழுக்க முழுக்க ஒரு தமிழ் முஸ்லீமைச் சாருமென்றால் அவரே ‘செயிராக்கரு’. தனித்தனி கீர்த்தனங்களாகப் பாடிய புகழைக் கொண்டவர் ‘செயிராக்கரு’. இராம நாடகக் கீர்த்தனை பாடிய மழவை சுப்பிரமணிய பாரதி, ஸ்கந்த புராணக் கீர்த்தனைகளுக்குரிய கவிக்குஞ்சர பாரதி; நந்தனார் சரித்திரக் கீர்த்தனையால் புகழ்பெற்ற கோபால கிருஷ்ண பாரதியார் ஆகியோரின் வரிசையில் இடம்பெற்ற ‘செயிராக்கரு’ என்ற செய்யிது அபூபக்கர் புலவர், முஸ்லிம்களின் பெருங்காப்பியமாகிய சீறாப்புராணத்தைக் கீர்த்தனைச் சுருக்கமாகப் பாடித் தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் தமிழுக்கும் பெருஞ்சேவை செய்திருக்கிறார்.
இராமாயணக் சுருக்கமாகிய இராம நாடகக் கீர்த்தனைகளைப் போன்று சீறாப்புராணத்தின் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்களிலும் கூறிய படல முறைப்படி கதையை சீறாப்புராணக் கீர்த்தனையாக ஆக்கித் தருவது எளிதன்று. அதற்கு தமிழில் ஆழ்ந்த புலமை வேண்டும். இலக்கண இலக்கிய தேர்ச்சி நன்கு கை வந்து கவிதை உள்ளமும் கற்பனைத் திறனும் எளிதில் உதவ, இசை இலக்கணத்திற்கேற்பப் பண்ணியற்றும் திறனும் பெற்றிருக்காவிட்டால் கீர்த்தனைச்சுருக்கம் இயற்ற முடியாதென்பது அருணாசலக் கவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர் நன்கு அறிவர். இசையொருபுறம், தமிழ்ப் புலமை ஒருபுறம் ஆக இரண்டிற்கும் அடிமைப்பட்டு ஆக இரண்டினையும் திருப்திப்படுத்தும் முயற்சியில் இங்கும் வெற்றியின்றி, அங்கும் வெற்றியின்றி, தோல்வியின் பயனாய், மட்டரக, நடுத்தரக் கீர்த்தனைகளை இயற்றியர் அநேகர். இசை நயம் மிகுந்திருக்கும்; ஆனால் சொல்நயமும் பொருள் நயமும் கவிதை நயமும் மருந்துக்குக்கூட இல்லாமல் ‘சப்’பென்று போயிருக்கும். கவிதை நயமும் சொல்லழகும் பொருட்செறிவும் சிறந்திருக்கும்; ஆனால் இசை தேய்ந்து குன்றிக் கீர்த்தனை ரங்கும் மௌசும் இன்றி கொழுப்பற்றுப் போயிருக்கும். கவிதை நயமும் இசையழகும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு கைகோத்து இயல்பாகக் குழைந்து இங்கித நடைபோட்டு ஒய்யாரமாக வரும் பொன்னான கீர்த்தனங்களைக் கதைச் சுருக்கமாகத் தந்து வெற்றி பெற்ற அரும்புலவர் மரபைச் சேர்ந்தவர் ‘செயிராக்கரு’.

கீர்த்தனங்களை ‘பதம்’ என்று சொல்லும் ஒரு வழக்கும் தமிழிலுண்டு. ‘பதிகம்’ எனவும் கூட கீர்த்தனங்களைக் கொள்ளும் மரபும் உண்டு. இன்றைக்கும் கூடத் தமிழ் முஸ்லிம்கள் கீர்த்தனையை ‘பதம்’ எனவே கூறுகிறார்கள். பாட்டுப்பாடு என ஒருவரை வேண்டும்போது தமிழ் முஸ்லிம்கள் ‘பதம் ஒன்று பாடு’ என்று கேட்டுக்கொள்ளும் வழக்கத்தை இன்றும் அவர்கள் மத்தியில் காணலாம். செயிராக்கரும் தமது கீர்த்தனங்களைப் ‘பதம்’ எனவே கொண்டிருக்கிறார். புலவர் தம் நூலுக்கு ‘சீறாப்பதம் என்று வழங்கா நின்ற கீர்த்தனம் என்று தலைப்புக் கொடுத்திருப்பதிலிருந்தே இதை அறியலாம். செயிராக்கரிடமிருந்துதான் கீர்த்தனத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின் ‘பதம்’ பிரயோகமும் வந்திருக்குமோ என்று ஐயுற இடமிருக்கிறது.

தமிழிசை இயக்கத்தையொட்டி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் தொகுதி தொகுதியாக எத்தனையோ தொகுதிகளில் தமிழைசைப் பாடல்களை வெளியிட்டனர். எட்டாவது தொகுதி முழுவதும் இராம நாடக இசைப்பாடல்கள் அடங்கியது. இப்படி வந்த தொகுதிகள் ஒன்றிற்கூட தமிழ் முஸ்லிம் புலவர்களால் எழுதப்பட்ட – சாதிமத இன வித்தியாசமின்றி  எல்லோரிடையேயும் பிரபலமாகி விட்டிருக்கும் முஸ்லிம் தமிழ் புலவர்களால் எழுதப்பட்ட – ஒரு கீர்த்தனை கூட மருந்திற்கு  இடம் பெறவில்லையென்றால் தனிப்பட்டவர்களின் வெளியீடுகளில் இந்த இஸ்லாமியத் தமிழ் கீர்த்தனங்கள் இடம் பெற்றிருக்கும் என்று எதிர் பார்க்க முடியாதல்லவா?
தமிழ்த் தாய்க்காகச் சாதி சமய வேறுபாடின்றித் தம் காலமுற்றும் எத்தனை எத்தனையோ தொண்டியற்றிய மகாமதி, சதாவதானி, மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம், தமிழ்க்கடல் அல்லாமா கா.ப. செய்குத்தம்பிப் பாவலர் அவர்கள் தங்களின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் , முஸ்லிம் தமிழ்ப் புல்வர்களின் நூற்களையும் கண்டெடுத்து அச்சேற்றிப் பாதுகாத்திருக்கிறார்கள். செயிராக்கரின் சீறாக்கீர்த்தனை அச்சாகிப் புத்தமாக வந்ததில் மகாமதிப் பாவலர் அவர்களும், மதுரை ஆசுகவி ஆறுமுகம் சேர்வை அவர்களும் சீறாக் கீர்த்தனைக்குச் சாற்றுக்கவிகள் பாடியிருப்பதிலிருந்தே நூல் வெளிவருவதில் பாவலர் அவர்களுக்கிருந்த பங்கு தெரியவருகிறது.

ஆயினும் அச்சு வடிவத்தில் வந்த இந்த கீர்த்தனை நூல் இன்றைய தமிழரிடையே எத்தனை பேரிடமிருக்கிறது? பல வருடங்களாக எவ்வளவோ பாடுபட்ட பின்னரும் என் கைக்குக் கிடைத்த பிரதியில் கூடப் பாதிக்குமேல் பக்கங்களில்லை. உப்புப் பொரிந்த பழஞ்சுவர்போல், ‘இற்றிறந்த’ நெடும் பழம் பஞ்சாங்கத் தாளகளாகப் பொடிந்து நொறுங்கிப் போயிருக்கும் செயிராக்கருப் புலவர் அவர்கள் கீர்த்தனைப் புத்தகத்தின் வருங்காலத்தை நினைக்கவே இயலவில்லை. தமிழ் நூல்கள் எம்மதத்தினரைச் சார்ந்ததாயினும் அவை தமிழரின் சொத்தல்லவா? பௌத்தமும், சமணமும் வளர்த்த தமிழைப் பிற சமயத்தினர் தீண்டுவதில்லை என்றிருந்தால் நமது தமிழ்ச் செல்வம் என்னவாகியிருக்கும்? இஸ்லாமியத் தமிழ் நூல்களை இஸ்லாமியர்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்ற குறுகிய மனப்பான்மை எந்த தமிழனிடத்திலும் இருக்க நியாயமில்லை. இஸ்லாமியத் தமிழ் நூற்கள் அழிந்தால் அது தமிழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் நஷ்டம். தமிழ் இலக்கியத்தின் எந்தப் பகுதி எந்த அளவிற்கு அழிந்தாலும் அந்த அளவிற்குத் தமிழ் செத்துப்போய்விட்டது என்பதுதான் அர்த்தம். இஸ்லாம் வளர்த்த தமிழும் தமிழ் நூற்களும் செத்துக் கொண்டிருக்கின்ற. சாவிலிருந்த அவற்றை மீட்க வேண்டிய பொறுப்பு எல்லாத் தமிழரையும் சார்ந்தது. சமய, இனக் கொள்கை வேறுபாடுகள் காரணமாக இந்தப் பொறுப்பிலிருந்து நழுவிவிடுகிறவர்கள் உண்மைத் தமிழராக மாட்டார்கள்.

‘செயிராக்கரு’ ஓர் ஏழை முஸ்லிம் என்பதும் வறுமையிலேயே பிறந்து வறுமையிலேயே வாழ்ந்தவர் என்பதும் அவரது வாழ்க்கையிலிருந்து தெரியவருகிறது. வாழ்வில் இரண்டே இலட்சியங்கள் அவரை இயக்கி வந்திருக்கின்றன. ஒன்று தமிழ் மீதுள்ள அளவிறந்த பற்று. மற்றொன்று அல்லாஹ்விடத்தும் அவனது திருத்தூதரிடமிருந்தும் வைத்திருந்த அளவிறந்த பக்தி. தமிழுக்காகவும் இஸ்லாத்திற்காகவும் வாழ்வதொன்றைத் தவிர அவர் வேறொன்றையும் விரும்பியதாகத் தெரியவில்லை. வறுமையில் வாழ்ந்து கொண்டு வாழ்வில் தாம் மேற்கொண்ட இலட்சியங்களில் வெற்றி பெற முடியாதல்லவா? ஆகவே தம் குறிக்கோள்கைகூடத் தக்க உதவி செய்யும் வள்ளலைத் தேடியலைந்தார். பண்டைய சேரநாட்டின் தென்மேற்குக் கடற்கரையோர ‘விளிஞ்ஞத்தை’ அடுத்த பூவாறு என்னும் பட்டினத்தில் வாழ்ந்து வந்த ‘போக்குமூஸா’ என்பாரின் மகன் செய்யிது முஹம்மது என்பார் புலவரின் கருத்தையறிந்து தக்கன் செய்யும் வள்ளலாக அமைந்தார். கண்ணாயினார் போல் செயிராக்கரு தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் சேவை செய்யும் பணியில் ஈடுபட்டார். தமது 14 வயது முதல் 50 வயது வரை ஈரேழு வகையான பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றும் அறிய அவரது நூற்களே சான்றாக இருக்கின்றன.

ஆண்டவனுக்கெதிராக மக்களத் தீமையின்பால் அழைப்பதொன்றையே தனது தொழிலாகக் கொண்ட ஷைத்தானாகிய இபுலீசை கதாபாத்திரமாக வைத்து அவனது வரலாற்றை ‘இபுலீசு நாமா’ என்கிற நூலில் அம்மானையாகப் பாடியிருக்கிறார். ஆங்கிலத்தில் இதே பாத்திரத்திற்கு இடம் தந்து மில்டன் எழுதியிருக்கும் காவியம் இபுலீசு நாமாவைப் படிப்போருக்கும் ஞாபகம் வராமல் இராது. செயிராக்கருப் புலவர் ‘ஞானப் பிரகாச தவமணி மாலை’ என்ற இன்னொரு நூலை சந்தச்சரளிக் கும்மியாகவும் ஞான ஆனந்த்தளிப்பாகவும் பாடியிருக்கிறார். தமது இலக்கியப் பணிக்கு உறுதுணையாக நின்ற பூவாறு செய்யது முகம்மது என்ற வள்ளல்பாலுள்ள தமது நன்றியையும் அன்பையும் சீறாக் கீர்த்தனையின் முக்கிய இடங்களிலெல்லாம் பாடி வைத்திருக்கிறார். சடையப்ப வள்ளலைக் கம்பனும், சந்திரன் சுவர்க்கியைப் புகழேந்திப் புலவரும் தத்தம் நூல்களின் பிரதான பாகங்களில் பாடி வைத்திருப்பதைப்போல, சீறாவைப் பாடச் செய்யிது முஹம்மது வள்ளல் பொருளீந்ததால் தன் பெயரைத் துலக்கியதைப்போலச் சுரத்தில் நபியழைத்த மதி உலகில் நிறைந்தது என்றும், இன்னொரிடத்தில் பூவாற்று வள்ளல் பொருளீந்ததால் பாவம் ஓடியதைப் போல சுரத்தில் இக்ரிமாவின் சேனை நபியைக் கண்டு ஓடியது என்றும் நயம்படக் கூறுகிறார் செயிராக்கரு.

இவ்வாறு தமிழ்ப் பண்பாட்டு மரபிற்கேற்ப வாழ்ந்த புலவரின் சமாதியை இன்றும் நாஞ்சில் நாட்டின் பழம்பெரும் தலைநகராகிய கோட்டாறு என்னும் ஊரில் காணலாம். ‘சின்ன மக்கா’ என்று கருதப்படுவது கோட்டாறு. கோட்டாறு முஸ்லிம்களின் பூர்வபுருடர் என்றும் மதஞான குருவென்றும் கருதத்தக்க ஹஸ்ரத் பாவா காசீம் என்ற அராபிய நாட்டு மதபோதகரும் ஞானமேதையும் அடக்கமாகியிருக்கும் பள்ளி கோட்டாற்றுக்கே புகழ் தேடித்தருவது. நபிகள் நாயகமே பிரசன்னமாகிய பெருமையளித்த பள்ளிவாசல் இதுவென்ற ஓர் ஐதீகம் உண்டு. இந்த ஐதீகம் வரலாற்று உண்மைக்கு முரண்பட்டதெனினும் இன்றைக்கும் கோட்டாற்றில் உள்ள பாமர முஸ்லிம்கள் இந்த ஐதீகத்தில் அழியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இத்ததகைய மகத்துவம் வாய்ந்த காசீம் பாவா பள்ளிக்கு வடபக்கம் இருப்பது மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டால் புகழ்பெற்ற சூ·பி ஞானி ஹஸரத் ஞானியார் சாகிபு அவர்கள் சமாதி இருக்கும் ஞகனியார் பள்ளி. இவ்விரு பள்ளிவாசல்களுக்கும் எதிரே சிலநூறு அடி தூரத்தில் கட்டப்பட்டிருக்கும் புலவர் பள்ளியில்தான் செயிராக்கரு அவர்களது சமாதி இருக்கிறது. தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய மகாமதி, சதாவதானி செய்கு தம்பிப் பாவலர் அவர்கள் சமாதியும் இந்தக் கோட்டாற்றிலேயே இருக்கிறது.

ஒரே ஊரில் இத்தனை மேதைகளின் சமாதிகள்! ஊருக்குப் பெருமைதர வேறு என்ன வேண்டும்? மேதைகளின் சிந்தனையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் அவர் தம் முந்தையர் ஆயிரமாண்டுகள் வாழ்ந்து மடிந்ததுமான கோட்டாற்றை வந்தனை செய்து நம் வாயார வாழ்த்தத்  தோன்றுகிறதல்லவா? இருப்பினும் செயிராக்கரு செய்த சேவையை இன்றைய தமிழகத்தில் எத்தனை பேர் சிந்தை செய்து வந்தனை செய்கின்றனர்? அவர் மனைவி மக்களுக்காகவோ குடும்பத்திற்காகவோ வாழவில்லை. குறுநில மன்னர்களையோ, வள்ளல்களையோ பாடி நிதி திரட்டிச் செல்வதில் திளைக்க விரும்பவில்லை. தமிழையும் இஸ்லாத்தையும் வளர்ப்பதொன்றையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த முஸ்லிம் பக்தர், இல்லறத் துறவி, ஞானி செயிராக்கரு புலவர் அவர்களின் சமாதி முன்னர் கண்மூடி மௌனியாக நின்று இவற்றையெல்லாம் ஒருகணம் நினைத்து உருகி நிற்பவர் இன்று எத்தனை பேர்? மெல்லச் செத்துக் கொண்டிருக்கும் அவரது சீறாக்கீர்த்தனையின் ஒரு புதிய பதிப்பையாவது கொணர்ந்து ஆண்டிற்கொரு தடவையேனும் அவர் சமாதி முன்னர் அதைப் பாடும்வகை செய்வது தமிழர்களின், குறிப்பாகத் தமிழ் முஸ்லிம்களின் கடமை. இந்தக் கடமையை யாரேனும் செய்வாராயின்  இந் நீண்ட கட்டுரையின் நோக்கம் ஓரளாவாவது நிறைவேறும்!
(முற்றும்)

நன்றி : செய்குத்தம்பிப் பாவலவர் அவர்களின் மகனார் கே.பி. எஸ் ஹமீது ,  பாவலர் பதிப்பகம் ( 53, நைனியப்பன் தெரு, சென்னை -1 )

No comments:

Post a Comment