vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Sunday, February 6, 2011

அரிய இசை பற்றிய விளக்கம்

சென்னை பைன் ஆர்ட்ஸ் அமைப்பின் எட்டாவது ஆண்டு இசை விழாவில் வயலின் மேதை வி.எஸ்.நரசிம்மனுக்கு கோட்டு வாத்தியம் நாராயண அய்யங்கார் அவார்ட் பார் எக்ஸலன்ஸ் விருதை "சிடி' யூனியன் பாங்க் நிர்வாக இயக்குனர் அளித்து கவுரவித்தார் . சித்திரவீணை வித்வான் நரசிம்மன் இந்த விழாவை வாணி மகாலில் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். டாக்டர் பி.எம்.சுந்தரம் இவ்விழாவில் சிறப்புரை ஆற்றினார். வாக்கேயக்கார வைபவம் விசேஷ வாத்தியனுபவா மற்றும் யுவகலா வைபமாக திட்டமிடப்பட்ட இவ்விழா அமரர் எஸ்.ராஜம் நினைவாஞ்சலி இசை விழாவாக, மயிலை கோகலே சாஸ்திரி இன்ஸ்டியூட் வளாகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வயலின் மேதை, வாழ்நாள் இசை சாதனையாளர் லால்குடி ஜெயராமனின் சிறந்த இசை உருப்படிகளைப் பற்றிய லால்குடி விஜயலட்சுமியின் உரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் நேர் சிஷ்ய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். கடும் உழைப்புடன் பயிற்சி செய்து அரியக்குடி, ஆலத்தார் சகோதரர்கள் போன்ற இசை ஜாம்பவான்களுக்கு பக்கப் பலமாக வாசித்த அனுபவம் பெற்று புகழேணியின் உச்சியைப் தொட்டவர். ஒரு சிறந்த வயலின் கலைஞராகவும், குருவாகவும் நிறைய மாணவ, மணிகளை உருவாக்கிய பெருமை உள்ளவர் என்பதோடு நிறைய வர்ணங்கள், கீர்த்தனங்கள், தில்லானா போன்ற அரிய உருப்படிகளை இயற்றி மேலும் புகழ் பெற்று விளங்குவதன் காரணம் இவைகளின் உட்பொருள், சாகித்ய வடிவமைப்பு போன்ற சங்கீத இலக்கணங்களும் - நுணுக்கங்களுமே என்று உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருபவர் லால்குடி என்பதை அவருடைய இசை உருப்படிகளைப் பாடி விளக்கியது சுவையாக இருந்தது. மைசூர் வாசுதேவாச்சார்: டாக்டர் பி.எம்.சுந்தரம் மைசூர் வாசுதேவாச்சாருடைய ஒப்பற்ற படைப்புகளையும், இவை தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடத்தில் கவிநயத்துடன் உள்ளதை குறிப்பிட்டு பேசியது சிறப்பாக இருந்தது. ருத்ரபட்ணம் சகோதரர்கள் இவற்றைப் பாடியது அருமை. மழவை சிதம்பர பாரதி - பிரமீளா குருமூர்த்தி விளக்கங்கள்: டாக்டர் பிரமிளா குருமூர்த்தி ஒரு பன்முக கலைஞர், பேராசிரியர் இசை ஆய்வாளர். இந்நிகழ்ச்சியில் மழவை சிதம்பர பாரதி இயற்றிய பாடல்களை எஸ்.ஜி.கிட்டப்பா போன்ற நாடகக் கலைஞர்கள் மேடையில் பாடி புகழ் பெற்றதையும், இருநூறு பாடல்களை புனைந்தாலும் இன்றும் அவை வெளிச்சத்துக்கு வராமல் அவருடைய சந்ததிகளால் பாதுகாக்கப்பட்டு வருவதையும் கூறினார். டாக்டர் சுந்தரம்: ஜாவளிகள் பற்றி சுவாரசிய தகவல்களை தந்தார். பதினெட்டாம் நூற்றாண்டில் இவை இடம் பெற்றதையும் கன்னடத்தில் ஆரம்பித்து பின்பு தெலுங்கு மொழியிலும் இசை நிகழ்ச்சியின் கடைசி பகுதியில் இடம் பெற்றன. மதுரை நந்தனூர் கிராமத்தில் பிறந்த, கவிகுஞ்சர பாரதியென்று அழைக்கப்பட்ட கோடீஸ்வர அய்யர் பற்றி டாக்டர் துர்கா விளக்கினார். தீவிர முருக பக்தர் என்பதோடு எழுபத்திரெண்டு மேள கர்த்தா ராகங்களிலும், விவாதி ராகங்களிலும் சாகித்யங்களை இயற்றி புகழ் பெற்றார். இவை அனைத்தையும் அக்கரையுள்ள வெளியிட்ட அமரர் எஸ்.ராஜத்திற்கு இசையுலகம் நன்றி கடன்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் நர்மதா: டாக்டர் நர்மதாவின் வயலின் வாசிப்பு போன்று அவருடைய உரையும் இனித்தது. இந்திய இசையில் உள்ள, எல்லா சிறப்பம்சங்களையும் குறிப்பாக வட இந்திய இசை மற்றும் தென்னிந்திய இசை பற்றி அருமையாக ஒப்பிட்டு பேசியதோடு வயலினில் வாசித்தும் ரசிகர்களை கவர்ந்தார்.
சீனிவாசனின் வீணை இசை
சென்னை பைன் ஆர்ட்சில் நடந்த விளக்கவுரையைத் தொடர்ந்து வீணை வித்வான் சீனிவாசனின் கச்சேரி நடைபெற்றது. சீனிவாசனின் வாசிப்பு இந்த நிகழ்ச்சியில் படு அக்கறையுடன் இருந்தது. காரைக்குடி பாணியில் தனி முத்திரை பதித்து வாசித்து வருவதோடு வீணையை லாவகமாக மீட்பு மதுரமாக சங்கதிகளைத் தருபவர். இவருடைய சுத்த தன்யாசி ராக வாசிப்பு செவிகளை குளிர வைத்தன. ஸ்ரீ புரந்தரதாசருடைய நாராயணா கீர்த்தனத்தை சிறப்பாக வாசித்து வழங்கியது மெச்சும்படி இருந்தது. பேகடா ராக விரிவு முதல் தரமான வாசிப்பு என்று கூறலாம். மந்த்ர ஸ்தாயி மீட்டுக்கள் சுகாநுபவமாக இருந்தன. சுப்பராய சாஸ்திரிகளுடைய அபூர்வ கிருதியான சங்கரி நீவே வரிக்குவரி அக்கறை ததும்பிய சங்கதிகள், சிறப்பான சிட்டை ஸ்வரம் இனிமை ததும்பிய வாசிப்பு. ஸ்வரங்கள் நெஞ்சில் இடம் பிடித்தன. ஸ்ரீ தியாகராஜருடைய தெரதீயகராதா (கவுளிபந்து) கீர்த்தனையை நயமாக கையாண்டு வாசித்தார்.
பிரதான கல்யாணி படு உழைப்புடன் இருந்தது. ராக விரிவுகள் குறிப்பாக கீழ்ஸ்தாயில் இருந்து மத்யம கால விரிவுகள் கவனத்தை கவர்ந்தன. ஸ்ரீ தியாகராஜருடைய நயமும் உருக்கமும் சேர்ந்த எந்துகோ நீ மனசு கரகது (ஆதி எந்த காரணத்தால் உன் மனம் இரங்கவில்லை) என்ற தாப உணர்ச்சிகளை வெளிப்படுத்திய வாசிப்பும் நிரவல், ஸ்வரங்களின் விரிவு குறைப்புக்களும் இனிமையாக இருந்தன. சிந்து பைரவி சுருட்டி மங்களத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. சேர்தலை அனந்த கிருஷ்ணனின் அடக்கமும் நயமும் இணைந்த மிருதங்க வாசிப்பு நிகழ்ச்சிக்கு பக்கபலம். தனி ஆவர்தனத்தில் வைக்கம் கோபாலகிருஷ்ணன் கடம் வாசிப்பு சிறப்பாக இருந்தது.

No comments:

Post a Comment